1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (05:02 IST)

ரூ.580 கோடிக்கு அடகு வைக்கப்பட்டதா போக்குவரத்து கழகத்தின் பணிமனைகள்?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகள் 580.63 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமாக இருக்கும் பல்லவன் இல்லமும், அயனாவரம், மந்தைவெளி பணிமனைகளும், 490 பேருந்துகளும் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியே போனால் மாநகர போக்குவரத்து கழகமே அடகில் மூழ்கிவிடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது


 


இந்த நிலையில் இதுகுறித்து குறிப்பிட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இதுகுறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: ’பல்லவன் இல்லத்தை வங்கிகளில் ரூ.30.50 கோடிக்கு அடமானம் வைத்தது தி.மு.க ஆட்சியில்தான். பல்லவன் இல்லம் மட்டுமன்றி மேலும் 6 இடங்கள் தி.மு.க ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டது. அவர்களின் ஆட்சி காலத்தில் வெறும் 10 புதிய பணிமனைகளே தொடங்கப்பட்டன. ஆனால், எங்கள் ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகங்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.10,513 கோடி நிதி திரட்டப்பட்டது. பணிமனை பராமரிப்புக்காக மட்டும் 53 விருதுகளையும் நாங்கள் பெற்றுள்ளோம்’ என்று கூறினார்.