1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (16:20 IST)

போக்குவரத்துதுறை அமைச்சர் பாதுகாவலர் வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

கரூர் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாதுகாவலர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார் – அமைச்சர் வாகனம் என்பதினால் அரவக்குறிச்சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பிணத்தை கோணி சாக்குப்பைகளில் கட்டி கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.





கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய பள்ளிகளில் லேப்டாப் வழங்கி விட்டு, கட்சியினர் திருமண விழாவிற்கு அவசர, அவசரமாக சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டிற்கு ஈடு கொடுக்க முடியாத காவல்துறை பாதுகாப்பு வாகனம் நிலைதடுமாறி பள்ளப்பட்டி டூ அரவக்குறிச்சி இடையே உள்ள பூலாம்வலசு பிரிவு பெட்ரோல் பங்கில் ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அதே பகுதியில் குறிக்காரன் வலசு பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி லட்சுமணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை கண்டும், காணாத போல் சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அங்கிருந்து அடுத்த அரசு நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் விபத்தில் பலியான லட்சுமணன் உடல் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அங்கே உள்ளூர் என்பதினாலும், மோதியது அமைச்சர் பாதுகாப்பு வாகனம் என்பதினால் பெரும் பிரச்சினை நிலவும் என்பதினால் சாக்குப்பைகளில் அ.தி.மு.க வினர் உதவியோடு, காவல்துறையும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மேலும் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மேல்சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று மலுப்பினர். இறந்தவர் ஒருவரை மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்ற அ.தி.மு.க வினர் செயல் ஒரு புறம் இருக்க, சாக்குப்பைகளில் பிணத்தை கடத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


-சி.ஆனந்தகுமார்- கரூர்