இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் ஆகியவற்றில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே மேற்கண்ட 15 மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதால் தமிழகத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் முன்கூட்டியே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கனமழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வேறு இடம் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran