1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (15:55 IST)

குட்கா விவகாரம் ; தமிழக புதிய டிஜிபி நியமனம் : முதல்வர் அவசர ஆலோசனை

தற்போது தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனை மாற்றிவிட்டு புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான ஆலோசனை துவங்கியுள்ளது.

 
குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்டு நடத்தியது.  இன்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த விவகாரம் அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிஜிபி ராஜேந்திரன், சுகாதரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்கான நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.
 
சோதனையின் முடிவில், சென்னையில் ஏ.வி.மாதவராவ், உமாசஙகர் குப்தா,மத்திய கலால் துறை பாண்டியன்,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை குட்கா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேஷ், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள்,பினாமிகள், அதிகாரிகள் என 22 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த வழக்கில் கைது எண்ணிக்கை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், டிஜிபி ராஜேந்திரனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் முதல்வர் தரப்பில் தற்போது ஆலோசனை நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
சிபிஐ சோதனையை அடுத்டு, டிஜிபி ராஜேந்திரன் ராஜினாமா செய்ய முன் வந்ததாகவும், அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை எனவும்,  அமைச்சர் விஜய பாஸ்கர் எந்நேரமும் கைதாகலாம் எனவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.