நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
கொரனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே
டாஸ்மாக் கடைகள் திறப்பது, ஆட்டோக்கள் இயங்க அனுமதித்தது, சலூன் கடைகள் திறக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்தது உட்பட பல தளர்வுகளை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகளை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் , இந்த தொழிற்பேட்டைகளில் 25% தொழிலாளர்கள் மட்டுமே கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது