1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (10:45 IST)

தமிழக முதல்வர் நிதியில் சேர்ந்த பணம் எவ்வளவு? – முதல்வர் அறிக்கை

கொரோனா நிவாரண பணிகளுக்காக பொதுமக்களிடம் தமிழக முதல்வர் நிதி அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் இதுவரை பெறப்பட்டுள்ள நிதி தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு மக்களிடம் நிதி அளிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல் நீங்கள் அளிக்கும் சிறிய தொகையும் ஏழை எளிய மக்களுக்கு உதவும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் முதல்வர் நிவாரண நிதி கணக்கில் பெறப்பட்ட நிதி குறித்து அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2 வரை மொத்தமாக 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 3ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் கணக்கில் சேர்ந்த மொத்த நிதி 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆக உள்ளது என செய்தி தொடர்பு துறை செய்தி வெளியிட்டுள்ளது.