வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:47 IST)

தமிழகத்திற்கு தனி கொடி - திருமா போர்க்கொடி?

தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என எம்.பி. தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 
 
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவு கூறும் வகையில் இன்று முதல் முதலாக “தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தது. 
 
இதனை தொடர்ந்து 1950 வாக்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என பல குரல்கள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து மாநிலங்கள் மறு உருவாக்க சட்டம், 1956 அமல்படுத்தப்பட்டது. இதன் படி மொழி வாரியாக பல மாகாணங்கள் பிரிக்கப்பட்டது. 
 
அதே போல் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திலிருந்து மெட்ராஸ் மாநிலம் தனியாக உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்த தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ் அமைப்புகள் பல கோரிக்கை வைத்தனர். 
 
இந்த கோரிக்கையை ஏற்று தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றை தமிழ்நாடு நாள் என அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கென தனியே மாநிலக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்பியுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்கும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.