”தலைவி” படத்தை தடை செய்யுங்கள்.. ஜெ.தீபா வழக்கு
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் “தலைவி” திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு தமிழில் ”தலைவி” என்றும் ஹிந்தியில் ”ஜெயா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இணையத்தள தொடரும் ஒன்று உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், ”என்னுடைய அனுமதி இல்லாமல் தலைவி படத்தையும், இணையத்தள தொடரையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், அத்திரைப்படத்தில் சொல்லப்படுபவை கண்ணியத்துடன் உள்ளனவா?” என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் “ எனவும் கூறியுள்ளார்.