2 லட்சம் வாக்குகள் அளித்த மக்களுக்கு எனது நன்றி: இயக்குனர் தங்கர் பச்சான்..
தன் மீது நம்பிக்கை வைத்து இரண்டு லட்சம் பேர் வாக்களித்த மக்களுக்கு தனது நன்றி என இயக்குனரும் கடலூர் தொகுதி பாமக வேட்பாளருமான இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
வணக்கம்.. எழுத்துக்கள், பேச்சுக்கள், திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கான அரசியலை பேசிக் கொண்டிருந்த எனக்கு தேர்தல் கள அரசியலில் செயலாற்றுவற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த சமூக நீதிப் போராளி மருத்துவர் திரு இராமதாஸ் ஐயா அவர்களுக்கும்,திரு அன்புமணிஇராமதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்...
அதேபோல் கடலூர் நாடாளுமன்றம் தொகுதியில் பதிவான வாக்குகளில் 20% வாக்குகளான 205244 வாக்குகளை என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும்,அதற்கு உறுதுணையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும்,அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் பெரு நன்றியினை உரித்தாக்குகிறேன்.
என்னை வளர்த்தெடுத்த இம்மக்களுக்காக தொடர்ந்து என் அரசியல் குரலும், செயல்பாடுகளும், படைப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். நன்றிகள்!!
இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாந்த் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து பெற்றிருந்த நிலையில் தங்கர் பச்சானுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது என்பதும் அவர் சுமார் 2 லட்சத்து ஐந்தாயிரம் வாக்குகள் வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran