1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (12:50 IST)

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! – பள்ளிகள் தீவிர ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன, மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் நேரடியாக பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் காலை, மாலை என்று சுழற்சி முறையில் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பள்ளி வருதல் என ஏதாவது ஒரு முறையில் பள்ளிகளை நடத்தலாமா என்பது குறித்து பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றன.

பெற்றோர்களுடனான ஆலோசனை மற்றும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து வகுப்புகளை மாற்றும் முடிவை தனியார் பள்ளிகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.