யார் அறிவாளி என விவாதிக்கலாமா? - அன்புமணி ராமதாஸுக்கு சவால் விட்ட தமிழிசை
யார் உண்மையான அரசியல்வாதி என அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி. இது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன் “20 வருடம் கடுமையான உழைப்பிற்கு பின்னரே எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. எனது சுய உழைப்பால் தலைவர் ஆகியுள்ளேன். எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பது கூற அன்புமணிக்கு தகுதி இருக்கிறதா என்பது வேறு விஷயம். நான் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். யார் அறிவாளி? யார் உழைப்பாளி? யார் சுய முயற்சியில் தலைவர் ஆனார்கள்? யார் தந்தையின் நிழலில் தலைவர் ஆனார்கள்? என விவாதிப்போம்.
நீங்கள் எத்தனை பேரை காவு வாங்கி அமைச்சரானீர்கள் என எனக்கு தெரியும். தகுதியானவர்கள் எத்தனை பேர் இருந்தும் யாருடைய மகன் என்பதற்காக நீங்கள் மந்திரி பதவியை பெற்றீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.