வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2019 (12:02 IST)

எப்படியாவது ஹிந்தியை திணித்துவிட முயல்கிறார்கள்: ஸ்டாலின் ஆவேசம்

இந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா “ நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழிதான்” என கூறியதை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது ஹிந்தி மொழியால் மட்டுமே தான் முடியும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழகத்தில் இந்தியை நுழைப்பதற்காக எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார். பாஜக அரசு, “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஹிந்தியை தென் மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டப்படும் நிலையில் தற்போது அமித் ஷா, நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.