ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2019 (05:36 IST)

பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

நேற்று முன் தினம் சுபஸ்ரீ பேனரால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்த நிலையில் நீதிமன்றம் அனைத்து கட்சிகளையும் கடுமையாக சாடியதோடு, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின், பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும் விழாவிற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தனது மகளை இழந்த நிலையிலும் சுபஸ்ரீயின் தந்தை தன் நிதானத்தை இழக்காமல் தெரிவித்த கருத்துக்கள் நம் ஒவ்வொருவருக்குமான பாடம். சுபஸ்ரீ குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கு எடுப்பதோடு அவர் தந்தையின் வார்த்தைகளை உங்களுக்கு வழிமொழிகிறேன்
 
இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்’-சுபஸ்ரீயின் தந்தை தெரிவித்த இந்தக் கருத்துக்களே நமக்கான பாடம். விதம்விதமாக பேனர் வைப்பது, சால்வை அணிவித்து பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது… இவை எதுவும் நமக்கிடையேயான அன்பை-பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை. 
 
நீங்கள், நான் என நாம் அனைவரும் மக்களின் வாக்குகளை விட அவர்களின் மனங்களை வெற்றி கொள்ளவே உழைக்கின்றோம். அவர்களைச் சென்றடைய சமூகப் பொறுப்புள்ள நம் செயல்களே ஒரே வழி. ஆனால் அந்த ஒரு நிமிட உணர்ச்சிப் பெருக்குக்காக எங்களை மகிழ்விப்பதாக நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் 
 
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே கருத்தை கூறிய நம் தலைவர் அவர்கள் இன்று மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளதோடு கட் அவுட்டுகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். அதை மனதில் கொண்டு ஆத்மார்த்தமான அன்பு, பொறுப்புள்ள சமூகப்பணி மட்டுமே நம்மைப் பிணைத்திருக்கும். மற்றபடி இது போன்ற வெட்டி படோபடங்கள் உங்களிடமிருந்து என்னை விலக்குமே தவிர இணைக்காது என்பதையும் உணர்ந்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
 
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்