எடப்பாடி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக பதட்டம் அதிகரித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கலந்தாலோசிக்க முதல்வரை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தலைமை செயலகம் வந்த ஸ்டாலினுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைமைச்செயலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருகே மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாரின் வாகனத்தில் அமர்ந்த படி பேட்டி கொடுத்த ஸ்டாலின் “ துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது செயல்படாத அரசாக இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தூத்துக்குடி டிஜிபி இருவரும் பதவி விலக வேண்டும். முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விலகும் வரை திமுகவின் போராட்டம் தொடரும்” என ஸ்டாலின் பேட்டியளித்தார்.