அரசு எச்சரிக்கையை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை..! – எந்தெந்த மாவட்டங்களில்?
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தின் எச்சரிக்கையை மீறி இன்று பல மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்துகளை எரித்து, அலுவலகத்தை சூறையாடினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, இதை கண்டித்து நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது என அறிவித்தது. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பும் “இன்று ஒருநாள் மட்டும் தனியார் பள்ளிகள் இயங்காது” என அறிவித்தது.
இந்நிலையில் இன்று அல்லது இன்று முதல் தன்னிச்சையாக விடுப்பு அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி பல மாவட்டங்களில் தனியரர் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் சிபிஎஸ்சி, நர்சரி, பிரைமரி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
கோவை, திருப்பூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகள் விடுமுறையில் உள்ளன.