கீழடிக்கு 22 ஏக்கர் கொடுத்த ”வள்ளல்” சகோதரிகள்..

Arun Prasath| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (15:36 IST)
அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த சகோதரிகள், தங்களது 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு கொடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில், கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. இதன் 5 ஆம் கட்ட அகழாய்வு பணி தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில்  மட்டுமே நடைபெற்றது.

இந்த ஆய்வில், பழந்தமிழர்களின் தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பழங்கால பானைகள், முதுமக்கள் தாழி ஆகியவை கிடைத்தன. வெறும் 10 ஏக்கரில் நடந்த ஆய்வில் கிடைத்த பொருட்களின் காலம், கி.மு.6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பொருட்கள் என தெரியவந்தது. மேலும் இதனைக் கொண்டு சிந்து சமவெளி நாகரீகம், மொகஞ்சதாரோ ஹராப்பா ஆகிய நாகரீகங்களுக்கு முன்னோடியான நாகரீகம் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடந்து 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் ஆகிய சகோதரிகள் தங்களது 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு அளித்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து சகோதரிகள், “ கீழடியில் பழந்தமிழர்களின் பொருட்கள் கிடைத்ததில் மிகவும் பெருமை கொள்வதாக கூறினர். மேலும், ”எங்களது 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு கொடுத்துள்ளோம், அதில், முழுமையாக ஆய்வு செய்தால், பழந்தமிழர்களின் பொருட்கள் இன்னும் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.

தமிழர்களின் பெருமையை உலகிற்கு அறியப்படுத்த, தங்களது 22 ஏக்கர் நிலத்தை கீழடிக்கு கொடுத்திருப்பதை குறித்து அப்பகுதியினர் அச்சகோதரிகளை பாராட்டி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :