1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (07:20 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் தரும் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. 
 
முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என நடைபெற்ற இந்த தேர்வை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் வேலையில் தொடர முடியும் என்ற இக்கட்டான நிலையில் தற்போது இந்த தேர்வின் முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதியபோதிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் , பெரும்பாலனவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தேர்ச்சி பெற 82 மதிப்பெண்களும், முன்னேறிய வகுப்பினர் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்களும் தேவை. ஆனால் தேர்வு எழுதிய பெரும்பாலானவர்கள் 30 முதல் 50  மதிப்பெண்களே பெற்று இருப்பதாகவும், இதனால் அவர்கள் செய்து வரும் வேலை கேள்விக்குறியதாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின்   (www.trb.tn.nic.in)  என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்றும்,  ஒவ்வொரு தேர்வர்களின் மதிப்பெண்களுடன் கூடிய முழுமையான  விவரம் வரும் 22ஆம் தேதி அதாவது நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விரைவில் இரண்டாம் தாளுக்குரிய முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன