1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sengottaiyan upset on Edappadi Palaniswamy

பறிக்கப்பட்ட பதவிகள்; அப்செட்டில் செங்கோட்டையன்: தினகரன் பக்கம் சாய்வாரா?

செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த பதவியை வகித்து வந்த அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி போன பின்னர் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார் ஓபிஎஸ்.
 
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டபோது, சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் முதல்வர் போட்டியில் செங்கோட்டையன் பெயரும் அடிபட்டது.
 
அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். செங்கோட்டையனுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, கல்வித்துறை அமைச்சர் பதவியும், அதிமுக அவைத்தலைவர், சட்டப்பேரவை அவை முன்னர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் செங்கோட்டையன் வசம் இருந்த பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது.
 
அணிகள் இணைப்புக்கு பின்னர் செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒதுக்கப்பட்டது. இன்னும் சில இலாகாக்கள் மாற்றப்பட்டது. சசிகலாவின் அறிவிப்புகள் அனைத்தும் செல்லாது என அறிவித்து அதிமுக அவை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு மீண்டும் மதுசூதனனுக்கு வழங்கப்பட்டது.
 
மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிலோ அல்லது ஆட்சிமன்றக் குழுவிலோ பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அதிலும் செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் செங்கோட்டையனிடம் இருந்த அவை முன்னவர் பொறுப்பும் பறிக்கப்பட்டு ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது அவரை பெரிதும் அப்செட் ஆக்கியிருக்கிறது.
 
இதனால் எடப்பாடி அணியின் மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் தினகரன் பக்கம் சாயலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. செங்கோட்டையன் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் அது பல அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தும்.
அடுத்த கட்டுரையில்
பேருந்திலிருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி