ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..
தமிழகத்தில் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது.
கடந்த மாதம் 10ம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இதைத்தொடர்ந்து தவெக ஆட்சியின் மீது திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிறைய சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. திமுக ஆட்சியில் கொந்தளித்த விஜய் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறார்? என திமுக கேள்வி எழுப்பி வருகிறது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பற்றி அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் நேற்று எழுப்பினர். இதில், கோபமடைந்த அவர் சட்ட ஒழுங்கில் என்ன பிரச்சனை?.. நாங்கள் ஆட்சிக்கு வந்து 20 நாட்கள்தான் ஆகிறது.. உங்கள் வீட்டில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?. உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்ததா?.. கேள்வியை மட்டும் நீங்கள் கேட்கிறீர்கள். எங்கேனும் பிரச்சனை நடந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.. உங்களின் உதவியோடு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
இதையடுத்து இந்த பதிலை சொல்லிவிட்டு செங்கோட்டையன் அங்கிருந்து கிளம்பினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டதால் மிரட்டுகிறீர்களா? என கேட்டார். இதை கேட்டதும் மீண்டும் திரும்பிவந்த செங்கோட்டையன் நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.. நாங்கள் எப்போதும் அமைதியானவர்கள்.. கடந்த 20 நாட்களில் சட்ட ஒழுங்கு தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்.. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை போக்சோ மற்றும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? என்று பதிலளித்தார்.
