ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 மார்ச் 2018 (13:32 IST)

வீட்டுச்சிறை ; தொடரும் அதிருப்தி : நாளை சிறைக்கு செல்லும் சசிகலா?

தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அந்நிலையில், நடராஜனின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சசிகலா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
அந்நிலையில், சமீபத்தில் நடந்த அவரது கணவர் நடராஜனின் உருவப்பட திறப்பு விழாவில் சிறைத்துறை அனுமதி அளித்திருந்தும் சசிகலா கலந்துகொள்ளவில்லை. மேலும், தினகரன் தன்னை வீட்டுச்சிறையில் வைத்திருப்பது போலவே அவர் உணர்கிறாராம்.
 
அதாவது, தனக்கு தெரியாமல் அவரை யாரும் சந்தித்து பேசி எதுவும் குழப்பிவிடக்கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருக்கிறார். எனவே, தஞ்சையிலேயே முகாமிட்டுள்ள அவர் சசிகலாவுடனே இருக்கிறார். அவரை யார் சந்திக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்கிறார். சசிகலாவின் சகோதரரான திவாகரன் மற்றும் அவரின் மகன் ஜெயானந்த் ஆகியோர் கூட ஒரிரு முறைதான் சசிகலாவை சந்தித்து பேச தினகரன் அனுமதித்துள்ளார்.

 
கட்சி விவகாரமாக வெளியே செல்ல நேரிட்டால் தனது மனைவி அனுராதாவை சசிகலா அருகில் வைத்து சென்று விடுகிறாராம் தினகரன். இதனால், சசிகலாவிடம் மனம் விட்டு பேச முடியாத நிலையில், அவரின் உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும்  இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வளவு ஏன்? தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏவிற்கே இதுவரை சசிகலாவை சந்திக்க தினகரன் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
பரோல் முடிய இன்னும் 5 நாட்கள் இருந்தாலும், கணவர் மறைவு, சொத்து பிரச்சனை, குடும்பத்திற்குள் விரிசல் என தொடர் மன உளைச்சலில் இருக்கும் சசிகலா, நாளைக்கு சிறைக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக தினகரனின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.