காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், காந்தியவாதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், பாஜக சார்பில் மரியாதை செலுத்த வந்த அக்கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள், காந்தி சிலைக்கு சிகப்பு வண்ணத்திற்கு பதிலாக காவித் துண்டை அணிவித்தது அங்கு திடீர் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து காந்தி அருங்காட்சியகச் செயலாளர் நந்தாராவ் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
“மகாத்மாவின் திருவுருவ சிலைக்குப் பல கட்சியை சேர்ந்தவர்கள் மாலை, கதர் ஆடை போன்றவற்றை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். வழக்கம் போல காங்கிரஸ் கட்சியினர் கதர் ஆடை அணிவித்தனர். ஆனால், பாஜகவினர் காவித்துண்டு அணிவித்தனர். விதிகளுக்கு முரணாக இருந்ததால், அந்தக் காவித் துண்டை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம்,” என்று அவர் தெரிவித்தார்.
பொதுவெளியில் காந்தி சிலைக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் நிறத்தின் துண்டை அணிவித்த செயல், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Edited by Mahendran