கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த 17 பேரில் கேசிபி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷும் ஒருவர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் டெண்டர் முறைகேடு புகாரில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கே.சி.பி.நிறுவனத்தின் ஒரு தளத்திலுள்ள அலுவலகத்தில் மட்டும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு முடிந்த நிலையில் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.