1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (12:22 IST)

தண்ணீருக்காக உசிலம்பட்டியில் முழு கடையடைப்பு போராட்டம்!!

தண்ணீர் திறக்க கோரியும், தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும் முழு கடையடைப்பு போராட்டம்.


தண்ணீர் திறக்க கோரியும், தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டம் உசிலம்பட்டி மக்களின் ஜீவாதார திட்டமாக விளங்குகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைப்பு பணிகளை முடிக்க பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் கடந்த 2017ஆம் ஆண்டு திட்டத்தின் முக்கிய பணியான 58 கால்வாய் தொட்டிப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது, இந்த தொட்டிப்பாலம் ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிப்பாலம் என்ற பெருமையையும் கொண்டதாக கூறப்படுகிறது.

சுமார் 100 கோடி வரை செலவு செய்து கட்டப்பட்டுள்ள இந்த கால்வாயில் தற்போது வரை சோதனை அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ள சூழலில் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்ட நீரினால் உசிலம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பெருமளவு உயர்ந்தது, முன்னதாக டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி வந்த மக்களுக்கு இத்திட்டத்தின் பயனாக நிலத்தடி நீர் உயர்ந்தால் இம் மக்களின் ஜீவாதார திட்டமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசானை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 1 ஆம் தேதி விவசாய சங்கங்கள் இணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில் அடுத்தகட்ட போராட்டமாக இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக மற்றும் வணிகர்கள் சங்கங்கள் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று வழக்கறிஞர் சங்கமும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ள சூழலில் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று வாகனங்களை இயக்கவில்லை.