புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (15:56 IST)

மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறதா மேலிடம்? பாஜகவில் நடப்பது என்ன?

தமிழக பாஜகவில் உள்ளுக்குள் நடந்து வரும் உள்கட்சி மோதலை கண்டும் காணமால் உள்ளதா பாஜக மேலிடம் என்ற சந்தேகம் வந்துள்ளது. 
 
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அரசு முறை வரவேற்புகள் முடிந்த பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை சந்திப்பது வழக்கம். தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்த வரை இந்த சந்திப்புகள் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும். 
 
ஆனால் சமீபத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கியத் தலைவராக கருதப்படும் பொன் ராதாகிருஷ்ணன் தனக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்துச் சென்று சந்தித்ததால் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. 
அதாவது, கமலாயத்தில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை காலி செய்ய சொல்லிவிட்டு தேசிய செயலாளரான ஹெச் ராஜாவுக்கு அறை ஒதுக்கிய விவகாரத்தில் இருவருக்கும் இடையே இருந்த புகைச்சல் இப்போது இந்த பிரச்சனையின் மூலம் வெடிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
 
ஆம், தமிழிசை ஆதரவாளர்களும், எச்.ராஜாவும் அவரது ஆதரவாலர்களும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தி உள்ளதால் இந்த பிரச்சனையை இப்போது கண்டுக்கொள்வதாக இல்லை. 
அதேபோல் டிசம்பர் மாதம் தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்போதுதான் இம்மாதிரியான பிரச்சனைகள் தீரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.