ப.சிதம்பரத்தை மறைமுகமாக தாக்கிய பிர்தமர் மோடி: திருப்பூர் கூட்டத்தில் பரபரப்பு
பிரதமர் மோடி சற்றுமுன் திருப்பூருக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
10% இட ஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த வகையிலும் பாதிக்காது என்றும், காங்கிரஸ், திமுக கூட்டணியில் இட ஒதுக்கீட்டில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார்.
வாரிசு அரசியலை வளர்ப்பதும், குடும்பத்தினரை பாதுகாப்பதுமே எதிர்க்கட்சியின் திட்டம் என்றும், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கலப்பட கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.
தாம் ஒருவர் மட்டுமே அறிவாளி என நினைக்கிறார், மறு எண்ணிக்கை அமைச்சர் ஒருவர் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி, அதனால் தான் அவர்களை மக்கள் தோற்கடித்தார்கள், மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என்று கூறினார்.
மனதின் எண்ணத்திற்கு ஏற்றபடி மனிதனின் உயர்வு இருக்கும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு' என்ற திருக்குறளுடன் தனது பேச்சை முடித்தார் பிரதமர் மோடி.