திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (11:12 IST)

ஆன்லைன் சூதாட்ட தடை.. அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி! – ஓபிஎஸ் மகிழ்ச்சி!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. முன்னதாக அதிமுக ஆட்சியில் அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போதைய திமுக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான புதிய மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா நேற்று ஆளுனரின் ஒப்புதலை பெற்ற நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தடையை மீறி செயல்பட்டால் சூதாட்ட விளம்பரம் செய்வோர், விளையாடுவோர், விளையாட்டு நடத்தும் நிறுவனம் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K