தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்
வரும் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என, பாஜகவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது, "பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளீர்களா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "எந்த கட்சியாவது கூட்டணி விஷயத்தில் நிலையாக இருந்தது உண்டா? திமுகவில் இருக்கும் கட்சிகள் எல்லாம் நிலையாக இருந்திருக்கின்றதா? இருக்கப் போகிறதா? இது அரசியல் என்பதால், இதைப் பற்றி சொல்ல முடியாது. அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றம் வரலாம். அதை இப்போதே எப்படி சொல்ல முடியும்? தேர்தல் வரும்போது தான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவோம்," என்று கூறினார்.
அதிமுகவை பொறுத்தவரை, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் குறிக்கோள் என்றும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran