சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று சந்தித்த நிலையில் இன்று அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் தனித்த கூட்டணியில் சந்தித்தன. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு விசிட் அடித்து அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பேசியதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அதன் எதிரொலியாக தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் கூட்டணி சாத்தியம் என அதிமுக கறாராக இருப்பதாகவும், அதுதொடர்பாகதான் அமித்ஷா இன்று அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. இது இரு கட்சிகளுக்கு இடையேயான சமாதான பேச்சுவார்த்தை என கருதப்படுகிறது.
Edit by Prasanth.K