புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (13:53 IST)

உறுப்பினர்களை நீக்கி விளையாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்?! – ஓபிஎஸ்ஸின் ஹிட்லிஸ்ட் 2!

EPS OPS
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 18 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த ஓபிஎஸ் தற்போது 44 பேரை நீக்கி இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ்ஸை தொடர்ந்து அவரது மகன்கள் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரை கட்சியை விட்டு நீக்குவதாக இன்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். ஓ.பன்னீர்செல்வமும் முன்னதாக ஈபிஎஸ், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை தொடர்ந்து தற்போது உறுப்பினர் நீக்கம் லிஸ்ட் 2ஐ வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதில் பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர், பெஞ்சமி, கேசி வீரமணி, மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி எதிர்தரப்பினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து வரும் நிலையில் யார் யார் கட்சியில் இருக்கிறார்கள் இல்லை என்பதே புரியாமல் அதிமுக தொண்டர்கள் விழிப்பிதுங்கி நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.