செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (12:10 IST)

அதிமுகவில் விரிசலா ? - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

சமீபகாலமாக அதிமுகவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

 
ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் எனவும் செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதமாக எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் ஜெயக்குமாருக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. 
 
மேலும், தன்னை நம்பி வந்த எம்.எல்.ஏக்கள் சிலருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
 
எனவே, அதிமுகவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும் இந்த கருத்தை கூறியிருந்தார்.
 
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஓ.பி.எஸ் “ அமைச்சரவையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதிமுகவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக திருநாவுக்கரசு கூறுவது பகல் கனவு. கட்சி மிகவும் வலுவாக உள்ளது. சசிகலாவிற்கு எதிரான தர்ம யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளோம்” என அவர் பேட்டியளித்தார்.