சமாதானத்திற்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சமாதான தூது அனுப்பினால் கூட எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸின் தலைமை மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் தேர்தல் நடத்தினால் பல தொகுதிகளில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும் என அதிமுக மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கருதுகின்றனர்.
பாஜகவின் தயவில் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டாலும், அதிமுக என்கிற கட்சி வலுவாக இல்லை. இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் எதிரொலித்தது. அப்போது பேசிய பல நிர்வாகிகள் அதிமுக பலவீனமடைந்து வருவதை சுட்டிக் காட்டி பேசியுள்ளனர். நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான கட்சிகள் தயாராக இல்லை.
பாஜக ஆதரவோடு ஆட்சியை தக்க வைத்துக்கொண்டாலும், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு தினகரனுடன் சமாதானமாக செல்வதே சிறந்தது என பலரும் பேச தொடங்கியுள்ளளனர்.
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவில் சரியான தலைமை இல்லை. அந்த தலைமைக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ஐ விட தினகரன் சரியாக இருப்பார் எனவும், அவரது தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதே சிறந்தது என பல அதிமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர்கள் பேச முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால், நேற்று செய்தியாளர்களை தினகரன் சந்தித்த போது ‘ எடப்பாடி தரப்பில் இருந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உங்களிடம் சமாதானம் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய தினகரன் “யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்” என பதிலளித்தார். இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோரிடம் சமாதானமாக செல்லும் முடிவில் தினகரன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.