1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:33 IST)

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தல்..? – புதுக்கோட்டையில் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தல்..? – புதுக்கோட்டையில் பரபரப்பு!
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும் போட்டியிட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த வார்டில் பெரிய கட்சிகள் சார்பில் யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே வார்டில் சுயேச்சையாக நிற்கும் லட்சுமணன் என்பவர் செல்வத்தை தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது செல்வத்தை லட்சுமணன் கடத்திவிட்டதாக செல்வத்தின் குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.