தம்பி அது பிரைவேட் பஸ்ஸுப்பா!.. கைது செய்த போது நாதக செய்த அலப்பறை!...
தமிழ்நாட்டில் தமிழக அரசால் செயல்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஆந்திரா கர்நாடகா, கேரளா போன்ற மாவட்டங்களில் அந்த மாநிலத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். எனவே அதுபோல தமிழகத்திலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் என்று எழுத வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல இடங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்படி போராட்டம் நடக்கும்போது அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்பதற்கு முன்பு தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை அவர்கள் ஒட்டி வருகிறார்கள். போலீசார் அவர்களை தடுத்து கைது செய்து சில மணி நேரங்களில் விடுதலை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
சமீபத்தில் கரூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, கருப்பையா உள்ளிட்ட சிலர் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து கைது செய்து அவர்களை அழைத்து செல்ல ஒரு தனியார் பேருந்தில் ஏற்றினார்கள்.
அப்போது அந்தப் பேருந்திலும் சில நிர்வாகிகள் தமிழ்நாடு என்கிற ஸ்டிக்கரை ஒட்ட முயற்சி செய்தனர். அதனைப் காவல் துறையினர் தம்பி இந்த பிரைவேட் பஸ்ஸுப்பா என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது தொடர்பான வீடியோவும் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.