வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...
அரசு வங்கிகளில் தற்போது உள்ள நடைமுறையின் படி அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த விடுமுறைகளே தங்களுக்கு போதாது என வங்கி ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதாவது அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த சில வருடங்களாகவே வங்கி ஊழியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக 2024 மார்ச் மாதமே வங்கி ஊழியர் கூட்டமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை
.
எல்லா சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என மத்திய அரசு நினைக்கிறது.. ஏனெனில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி ஊழியர்கள் பணி புரிவார்கள்.. மாதத்தில் மொத்தம் எட்டு நாட்களுக்கு மேல் ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும். இதை மத்திய அரசு விரும்பவில்லை.
எனவே, தங்களின் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம்ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தை இன்று மத்திய அரசுடன் நடைபெற்றது.. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி வருகிற 27ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26ம் தேதி குடியரசு தினம் என இரண்டு விடுமுறைகள் வருகிறது.. 27ம் தேதியும் வேலை நிறுத்தம் என்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.