தேர்வு வேணாம்னு சொல்லல.. இப்போ வேணாம்னுதான் சொல்றேன்! – மு.க.ஸ்டாலின் அறிக்கை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக ஜூன் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் தேதியில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”மே 31 வரை ஊரடங்கு தொடரும் நிலையில் ஜூன் முதல் நாளே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் பிடிவாதத்தையும், மாணவர்கள் மேல் அக்கைறையில்லாததையும் காட்டுக்கிறது. தமிழகத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. குழந்தைகளுமே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் அவர்களுக்கு தொற்று ஏற்படாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பொதுத்தேர்வு நடத்துவதில் உள்ள பல சிக்கல்களை விளக்கியுள்ள அவர் “பொதுத்தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. கொரோனா அபாயம் உள்ள இந்த சூழலில் அவசரமாக ஏன் நடத்த வேண்டும்? இயல்பு நிலை திரும்பியதும் உரிய கால அவகாசத்துடன் தேர்வை நடத்துங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.