எத்தனை மக்களுக்கு உதவுனீங்க? லிஸ்ட் இருக்கா? – ஸ்டாலினுக்கு சவால் விடும் மாஃபா!
தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலின் எத்தனை மக்களுக்கு உதவினார் என்ற பட்டியலை வெளியிட தயாரா என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சவால் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவ அதிமுக அரசின் அலட்சியபோக்கே காரணம் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”மக்களை சமூக விலகலை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் கட்சியனரை ஒன்றிணைத்து கொரோனா பரவும் விதமாக ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசு மக்களுக்கு என்ன செய்தது என்ற பட்டியலை வெளியிட தயார். திமுக 14 லட்சம் மக்களுக்கு உதவி செய்ததாக கூறுகிறார்களே, அந்த பட்டியலை வெளியிட தயாரா?” என சவால் விடுத்துள்ளார்.
மேலும் மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் திமுகவினரின் கருத்துகளுக்கு “மதுக்கடைகளை மூடுவதை விட திமுகவினர் நடத்தும் 60 சதவீத மது ஆலைகளை மூடி விடலாம்” என கூறியுள்ளார்.