புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:02 IST)

5 ஆவது நாளாக தொடரும் மருத்துவர்களின் போராட்டம்.. போதிய சிகிச்சை இல்லாததால் ஒருவர் பலி

தமிழக அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 5 ஆவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள், தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு அந்த கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இன்றுடன் இந்த போராட்டம் 5 ஆவது நாளாக தொடர்கிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே டெங்கு சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை தவிற மற்ற பிரிவுகள் அனைத்திலும் சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் ஒருவர் இறந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய மணிகண்டன் என்பவருக்கு போதிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.