இரவு நேரத்தில் தண்ணீர் திறக்கக்கூடாது..! – கனமழை தொடர்பாக முதல்வரின் உத்தரவுகள்!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
கேரளா, கர்நாடகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பதால் காவிரி ஆறு செல்லும் 12 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில் அவர் “கனமழை காரணமாக நீர்வரத்து அணைகளில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் போதிய முன்னறிவிப்பின்றி, மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீரை வெளியேற்றுவதோ, வெளியேற்றும் அளவை அதிகரிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்றுவதை அதிகரிக்கக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான தரமான உணவு, குடிநீர் வழங்க ஆயத்தம் செய்ய வேண்டும்.
முகாம்களில் தங்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். ஆற்றின் கரையோர பகுதிகளில் அலுவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.