சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் திடீரென மூடல்: பெரும் பரபரப்பு
சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் வரும் 7ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. இதனையடுத்து விமானத்தில் பெருவாரியாக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டதை அடுத்து விரைவில் சர்வதேச விமான சேவையும் தொடங்கப்படும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை அடுத்து மற்ற ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் வரும் 7ம் தேதி வரை தற்காலிகமாக மூட விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விமான நிலைய நிர்வாக அலுவலகம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது