1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (15:02 IST)

ஆரம்பிக்கிறதுக்குள்ள இத்தனை குறை சொன்னா எப்படி? – அப்செட்டான அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் அரசு பள்ளிகளுக்கும் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசின் இந்த திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் எப்படி ஒரே நேரத்தில் பாடம் எடுக்க முடியும்? பாடத்தில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் யாரிடம் கேட்க முடியும்? ஒரே வீட்டில் இரு மாணவர்கல் இருக்கும் நிலையில் ஒரே டிவியில் எப்படி இருவரும் பாடம் படிக்க முடியும்? என சரமாரியாக கேள்விக்கனைகளை பலர் தொடுத்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “அரசு ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும்போதே தொடர்ந்து குறைகள் சொன்னால் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர் இதுவரை 5 சேனல்கள் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ள நிலையில் மேலும் 2 சேனல்கள் சம்மதித்துள்ளதாகவும், அரசு திட்டத்தை தொடங்கிய பிறகு கருத்துக்களை சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம் என்று  கூறியுள்ளார்.