சென்னை வரும் மோடி! – கருப்பு கொடி காட்டுமா எதிர்க்கட்சிகள்?
சென்னையில் ஐஐடி கல்லூரியில் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தர இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கருப்பு கொடி போராட்டம் இந்த முறையும் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா 30ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் கிண்டி ஐஐடி சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு பிரதமர் மோடி சென்னைக்கு ஒரு விழாவுக்காக வருகை புரிந்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக, மதிமுக கட்சிகள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது பாடத்திட்டத்தில் இந்தியை புகுத்தும் நடவடிக்கை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவேளை போராட்டம் நடத்தப்படலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்களில் திமுக கட்சி கவனம் செலுத்தி வருவதால், அவர்களோ அவர்களது கூட்டணி கட்சிகளோ எந்த போராட்டத்திலும் ஈடுபட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.