சிலைக்கடத்தல் வழக்கு: பிரான்ஸ் தப்பிச்சென்ற பெண் சென்னையில் கைது!
தமிழகத்தில் சிலை கடத்தல் விவகாரம் கடந்த சில வருடங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய பொன்.மாணிக்கவேல் அவர்களை சென்னை உயர்நீதிமன்றமே நியமனம் செய்துள்ளது
இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி என்பவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின்போது மரிய தெரசா வனினா ஆனந்தி வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓடிய மரிய தெரசா வனினா ஆனந்திக்கு சென்னை உயர்நீதி மன்றமும், டெல்லி உச்சநீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்தது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உள்துறை அமைச்சகம் மரிய தெரசா வனினா ஆனந்திக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது
இந்த் நிலையில் பிரான்ஸில் இருந்து துபாய் வழியாக நேற்று சென்னை வந்த மரிய தெரசாவை போலீசார் கைது செய்தனர். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர் போலீசாரால் தேடப்பட்டு வருவதை அறிந்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்களுக்கு தகவல் அளித்தனர். உடனே சென்னை விமான நிலையம் வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவை கைது செய்தனர். அவரிடம் இன்று போலீசார் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது