திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:02 IST)

மிக்ஸியை விற்று சரக்கு வாங்கிய கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு !

திருப்பூரில் குடிப்பதற்காக வீட்டில் இருந்த மிக்ஸியை விற்றக் கணவனை மனைவி சப்பாத்திக்கட்டையால் தாக்க அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் – உமாதேவி தம்பதிகள். இவர்களுக்கு நிவேதன் என்ற மகன் உள்ளார். தம்பதிகள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். வெங்கடேசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ள வெங்கடேசன் மேலும் குடிக்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி வெங்கடேசன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து அடிபட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரை மருத்துவர்கள் சோதித்த போது அவர் உயிருடன் இல்லை. இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் அவர் விபத்தில் இறக்கவில்லை என்றும் யாரோ தலையில் பலமாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் உமாதேவியிடம் விசாரணை செய்ய ‘வீட்டில் இருந்த மிக்சியை எடுத்துச் சென்று குடிக்க மதுவும், சிக்கனும் வாங்கியதால் கோபத்தில் கணவரைக் கட்டையால் தாக்கியதாக’ ஒத்துக்கொண்டார். இந்த சம்பவமானது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.