செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (08:36 IST)

மதுரை அலங்காநல்லூரில் களைகட்டும் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று 1,050 காளைகள், 1,241 வீரர்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தால், அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு சற்று கால தாமதம் ஆகியே ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு எல்லா முன்னேற்பாடுகளும் முன்னரே செய்யப்பட்டு, கடந்த 14 ந் தேதியான பொங்கலன்று அவனியாபுரத்திலும், நேற்றைய தினமான மாட்டுப் பொங்கல் 15 ந் தேதியன்று பாலமேட்டிலும் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.
 
இந்நிலையில் இன்று தொடங்கிய உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 1,050 காளைகள், 1,241 வீரர்களுடன் கோலாகலமாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு கார், தங்கம், இரு சக்கர வாகனம், கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் கொடுக்க தயார் நிலையில் உள்ளன. மேலும் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 10 மருத்துவக் குழு, 12 கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற 4 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.