அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்
வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்றும் (14-ந் தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இன்று அவனியாபுரத்தில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் வரும் 16-ந் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவிருக்கும் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.