தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி - மு.க.ஸ்டாலின் டிவிட்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்நிலையில் , இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் “ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.