1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (10:09 IST)

இளம் தலைமுறையை விழுங்கும் சாதியை ஒழிப்போம்! – இயக்குனர் பா.ரஞ்சித்!

நாங்குநேரியில் தலித் மாணவர் இடைநிலை சாதி மாணவர்களால் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



நாங்குநேரியில் சின்னதுரை என்ற மாணவர் நன்றாக படித்து வந்த நிலையில் அவர் மீது சாதிய வன்மத்தோடு இடைநிலை சாதி மாணவர்கள் சிலர் தாக்கியதாக வெளியான செய்தி மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சாதிய ரீதியான இந்த ஏற்றத் தாழ்வுகளை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K