தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு.! அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!!
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார்.
முதல்வர் ஆலோசனை:
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நேரில் ஆறுதல்:
முன்னதாக படுகொலை செய்யப்பட்ட,பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்:
இது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அனைவருக்குமான அரசு என்றும் அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.