1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (10:38 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

MK Stalin
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக  8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைதான 8 பேரில் கடந்த ஆண்டு சென்னையில் கொலையான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா முக்கிய நபர் ஆவார். மேலும் ராமு, திருவேங்கடம், திருமலை உள்ளிட்ட அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா மோசடி நிறுவனம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் ஆற்காடு சுரேஷ் தரப்புக்கும் மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.