செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (08:28 IST)

எல்லாரும் கிளம்பிட்டாங்க! காலியாகும் திமுக கூடாரம்!– பகீர் கிளப்பும் கு.க.செல்வம்!

சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மேலும் பல திமுக பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேற போவதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க செல்வம் சமீபத்தில் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றதாக பேசப்பட்டு வந்த நிலையில், தொகுதி மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பேசவே டெல்லி சென்றதாக அவர் தெரிவித்தார். எனினும் அவரது செயலுக்காக திமுக செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள கு.க.செல்வம் தான் கடந்த முறை உட்கட்சி தேர்தலில் ஜெ.அன்பழகனுக்காக பதவியை விட்டு தந்ததாகவும், தற்போது தொடர்ந்து விட்டுக்கொடுக்க சொல்லி வற்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். திமுகவில் அவர்கள் குடும்பமும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும் மட்டுமே முக்கிய பதவிகளை வகிப்பதால் மேலும் பல திமுக பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ள அவர், விரைவில் பலர் திமுகவிலிருந்து வெளியேறுவார்கள் என கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், திமுக பிரமுகர்கள் வெளியேறினால் அது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.